சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும், நமது அடையாளத்தையும் கலாசாரத்தையும் அழிக்கத் துணிந்த காலனித்துவ ஆட்சியாளர்களால் நமது மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில் விஷ்ணுவின் தெய்வீக அவதாரமாக அய்யா வைகுண்டர் அவதரித்தார் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:-
அய்யா வைகுண்டர் அவர்களின் 193 – ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அய்யா வழியின் அனைத்து பக்தர்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.
சமுதாயத்தைக் காப்பாற்றவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் நமது அடையாளத்தையும் கலாசாரத்தையும் அழிக்கத் துணிந்த காலனித்துவ ஆட்சியாளர்களால் நமது மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட நேரத்தில், பகவான் விஷ்ணுவின் தெய்வீக அவதாரமாக அய்யா வைகுண்டர் அவதரித்தார். அவர் உலகளாவிய சகோதரத்துவத்தின் சனாதன மதிப்பைக் கற்பித்ததுடன் அனைத்து வகையான சமூக பாகுபாடுகளுக்கும் எதிராகப் போராடினார். அவரது எல்லையற்ற கருணை நம்மை ஒரே குடும்பமாக ஒன்றிணைத்து, ஞானத்தாலும், நல்லொழுக்கத்தாலும் நம்மை வழிநடத்தி, வளமான, நீதி சார்ந்த வளர்ச்சியடைத்த பாரதத்தை உருவாக்க நம்மை ஊக்குவிக்கட்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் ரவி, திருநெல்வேலியில் அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆவது அவதார தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக ஆளுநர் ரவி கூறுகையில், சனாதன தர்மத்தின் முக்கிய மதிப்புகளான உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் செய்தியை அய்யா அவர்கள் பரப்பினார். பாரதத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் சில சுயநலவாதிகள் வெறுப்பையும் பொய்யையும் பரப்பி வரும் நேரத்தில், அய்யா வைகுண்டர் அவர்கள் அருளிய போதனைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவை என தெரிவித்திருந்தார்.