அய்யா வைகுண்டர் அவதார திருநாள்: முதல்வர் ஸ்டாலின் – எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து!

அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ளது. திருச்செந்தூர் கடலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மாசி 20ம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அய்யா வைகுண்டரை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் அய்யா வைகுண்டரின் தலைமைபதி சாமிதோப்பில் இன்று அவதார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் அய்யா வைகுண்டரின் அவதார திருநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின்
திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள்! “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!” என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!” என கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛‛தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம்” என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர்,சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர், அய்யா வைகுண்டர் அவர்கள். ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அய்யா அவர்களின் 193வது அவதார தினமான இன்று அவர்தம் திருப்பாதங்களை போற்றி வணங்குகிறேன். நாம் ஒவ்வொருவரும் அறம் சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது. எளிமையாய் வாழ வேண்டும் எனும் அய்யா வழியை பின்பற்றும் அனைவருக்கும் இந்நன்னாளில் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.