இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: பிரதமர் மோடி!

உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் ஜாம் நகருக்கு சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் 3,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வன்தாரா வனப்பகுதியை அவர் பார்வையிட்டார். இது யானைகள் சரணாலயமாக விளங்குகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிர்சோம்நாத் மாவட்டம், பிரபாச பட்டினத்தில் உள்ள சோமநாதர் கோயிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி சுவாமியை வழிபட்டு பூஜை, வழிபாடுகளை நடத்தினார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை ஹெலிகாப்டர் மூலம் கிர் தேசிய பூங்காவுக்கு சென்றார்.

அங்கு திறந்தவெளி ஜீப்பில் சென்று சிங்கங்களை பார்வையிட்டார். யானை சவாரி மேற்கொண்டார். அப்போது சிங்கங்கள் உள்ளிட்ட வனஉயிரினங்களை அவர் புகைப்படம், வீடியோ எடுத்தார். இந்த புகைப்படம், வீடியோவை பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம். உலக வன உயிரின தினமான இன்று (மார்ச் 3) நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்க வேண்டும். ஒவ்வொரு உயிரினமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. வருங்கால தலைமுறையினருக்காக அவற்றின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இது வன உயிரினங்களை பாதுகாக்கும் நமது நாட்டின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.

உலக வன உயிரின தினமான இன்று கிர் வன உயிரியல் பூங்காவை பார்வையிடச் சென்றேன். இது ஆசிய சிங்கங்களின் தாயகமாகும். குஜராத் முதல்வராக பணியாற்றியபோது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள் இப்போது நினைவுக்கு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சிகளால் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின மக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களின் பங்கு பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ஜூனாகத்தில் தேசிய வனஉயிரின வாரியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் வனஉயிரினங்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக சிங்கம், புலி, சிறுத்தை, சிவிங்கி புலி, யானைகள், டால்பின் உள்ளிட்டவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். குஜராத் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி ராஜ்கோட்டில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.