பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மது ஒழிப்பு அவசியமான ஒன்று என சௌமியா அன்புமணி கருத்து தெரிவித்து உள்ளார். இதனை சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கூறினார்.
சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணி பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆண்டுதோறும் மார்ச் 8ந் தேதி மகளிர் தினம் கொண்டாப்படுகிறது. இதுபோன்று மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் 1 மாத காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது நன்றாக உள்ளது. பெண் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். வீட்டில் உள்ள பெண்களுக்கு பள்ளிக்கல்வி சிறப்பாக வழங்கப்படுகிறது. ஆனால் கல்லூரி கல்வி என்பது பெரும் சவாலாக உள்ளது. கிராம புறங்களில் குறைந்தளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் அங்கு பெண் குழந்தைகள் கல்வி கற்பது குறைவாக உள்ளது. ஆனால் அந்த பிரச்சினை பெருநகரங்களில் இல்லை.
பெண் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி வீடு உள்ளிட்ட எங்குமே பாதுகாப்பு இல்லை. தினமும் இதை நாம் பார்க்கிறோம். நெஞ்சை பதற வைக்கும் செய்திகளை கேட்கும்போது அச்சமாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பு என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் அவர்கள் எப்படி வீட்டைவிட்டு வெளியே செல்வார்கள். இந்த பயத்திற்கு காரணம் மதுவிற்பனை என்றே கூறலாம். பொது இடங்களில் மிட்டாய் விற்பனைக்கு பதில் கஞ்சா விற்பனை நடக்கிறது. இவ்வாறு சௌமியா அன்புமணி கூறினார்.