ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் காலனியில் நடந்தது. விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கலந்துகொண்டு 2,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
மொழிக்காக பலர் தங்களது இன்னுயிரை தந்துள்ளனர். அந்த உணர்வோடுதான் முதல்வர் போராடி வருகிறார். இந்தியாவிலேயே அனைத்து கட்சிகளையும் ஒருசேர கூட்டிய பெருமை முதல்வருக்கு தான் உண்டு. ஒன்றிய அரசு ஒரு சிறுகோட்டை போட சொல்லி அதனருகில் பெரிய கோட்டை போட முயலுகிறது. இதற்கு நாம் பலியாகமாட்டோம். எதிர்த்து நிற்போம்” என்றார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ”மக்கள் நலன் கருதி புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து அதை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். இதுபோல மாணவ செல்வங்களின் நலனை கருத்தில்கொண்டு கல்விக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதை சகித்துகொள்ள முடியாத அதிமுகவினர், விடியலுக்கான ஆட்சியை விடியாத ஆட்சி என சொன்னவர்கள் தூங்கிய பின் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்காக பாடுபடும் முதல்வருக்கு வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தரவேண்டும்” என்றார்.