முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம்!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்து போட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள ரூ.2,152 கோடி விடுவிக்கப்படும் என்றும், இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் கூட மும்மொழி கொள்கையை ஏற்கும் போது, தமிழ்நாடு ஏற்பதற்கு என்ன என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, மீண்டும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு குறித்த விவாதம் எழுந்துள்ளது. திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளும் ஓரணியில் திரண்டு இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களும் நடத்தப்படு வந்தன.

இதற்கிடையே மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும், இந்தி கற்றுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவும் தொடர்ந்து இருமொழிக் கொள்கையே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்து போட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ K.S.விஜயகுமார் (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.