தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி இருக்கிறார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான மசோதாவுக்கும், கனிம வளம் நிறைந்த பகுதிகளுக்கு வரி விதிப்பது ஆகிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசு இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தார். மசோதாக்களை திருப்பி அனுப்பவும் இல்லை. இதனால் ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்தின் 200வது பிரிவுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை உச்சநீதிமன்றம் சரமாரியாக விமர்சித்திருந்தது. ஆளுநர் மவுனமாக இருக்கலாமா? மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருந்தால் என்ன அர்த்தம்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கனிம வளங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த 2 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

பழுப்புக்கரி, சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகையான கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரட்டுக்கல், சரளை, கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக்கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 வகையான சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க இந்த சட்டம் வழி வகை செய்திருக்கிறது. இதன்படி பெரிய வகை கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறிய வகை கனிமங்களுக்கு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஜனவரி 5ஆம் தேதியுடன் 28 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. அந்த 28 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிகளில் தனி அலுவலகர்களை நியமினம் செய்யும் மசோதாகவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.