ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய நடவடிக்கை!

நாடு முழுவதுமுள்ள 60 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மகா கும்பமேளா போன்ற பண்டிகை காலங்களிள் கூட்ட நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாவதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் புதிதாக கூட்டநெரிசல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் இது தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நடைமேடைகளில் கூட்ட நெரிசலை தடுக்கவும், சரியான முறையில் நிர்வகிக்கவும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு பகுதிகளை உருவாக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, பயணிகள் தங்கள் ரயில் வரும்போது மட்டுமே நடைமேடைகளுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
புதுடெல்லி, ஆனந்த் விஹார், வாரணாசி, அயோத்தி மற்றும் பாட்னா நிலையங்களில் ஏற்கனவே இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

“தேர்ந்தெடுக்கப்பட்ட 60 நிலையங்களில் முழுமையான கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலையங்களில் உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் மட்டுமே நடைமேடைகளில் அனுமதிக்கப்படுவார்கள். அங்கீகரிக்கப்படாத நுழைவுப் பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும்” என்று மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, கூடுதலாக அனைத்து ரயில் நிலையங்களிலும் புதிய நடை மேம்பாலம்களை நிறுவப்படவுள்ளது. மகா கும்பமேளாவின் போது அகலமான பாலங்கள் பயனுள்ளதாக இருந்ததால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 12 மீட்டர் அகலமும் 6 மீட்டர் உயரமும் கொண்ட நடை மேம்பாலங்கள் திறக்கப்படவுள்ளது.

ரயில் நிலையங்கள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்களை நிறுவுவதன் மூலம் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் அமைச்சகம் உறுதி செய்துள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் துறைகளின் அனைத்து அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட நிலையங்களில் தனியே செயல்பாட்டு அறைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பெரிய ரயில் நிலையத்திலும் முக்கிய முடிவுகளை எடுக்க ஒரு நிலைய இயக்குநர் இருப்பார். ரயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் டிக்கெட் விற்பனை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரமும் நிலைய இயக்குநருக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.