அமித்ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி படம்: பின்னணியில் திமுகவினர் உள்ளதாக அண்ணாமலை குற்றசாட்டு!

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் ஒட்டப்பட்ட வரவேற்பு போஸ்டரில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் இருந்த சம்பவத்தின் பின்னணியில் திமுகவினர் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் அமைந்து உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் 56வது ஆண்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். சி.ஆர்.எஃப் வீரர்கள் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்ட அவர், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ‘சென்டினல்’ இதழை அவர் வெளியிட்டார்.

அமித்ஷாவை வரவேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் “ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் இந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே! வருக! வருக!” என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, ”இதற்கும் எனக்கும் எந்த சம்பதமும் இல்லை. இதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. எனது பெயரையும், அமித்ஷாவின் போட்டோவுக்கு பதிலாக வேறு போட்டோவை மாற்றி இழிவு படுத்தி உள்ளனர். இந்த போஸ்டரை பிரிண்ட் செய்த அச்சகத்தின் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை. விஷக்கிருமிகள் இதுபோன்று செய்து உள்ளனர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் மாவட்ட தலைவரும் விளக்கம் கேட்டு உள்ளார். காவல்துறையில் புகார் அளிக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

அமித்ஷா படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் போஸ்டராக ஒட்டப்பட்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இது வழக்கம் போல் திமுகவினர் ஒட்டி உள்ளனர். யார் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டதோ, அந்த சகோதரி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி உள்ளார். பாஜகவை பொறுத்தவரை போஸ்டர் ஒட்ட சில விதிகள் உள்ளது. தேசியத் தலைவர், மாநிலத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு பிறகே மற்ற தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கும். இதுதான் எங்கள் மரபு. அமித்ஷா அவர்களை கேவலப்படுத்துகிறேன் என்ற பெயரில் திமுகவினர் இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். எங்களின் வாதங்களை எதிர்கொண்டு திமுகவினரால் பேச முடியவில்லை. தேசியத் தலைவரை போஸ்டர் ஒட்டிதான் கேவலப்படுத்துவோம் என்று சொன்னால், இது திமுக தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்வதற்கு சமம். காவல்துறையிடம் புகார் அளித்து உள்ளோம். இது போல் யார் போஸ்டர் அடித்து உள்ளனர் என்பதை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.