கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பாமக துண்டு போட்டுக் கொண்டு சாதிய பாடலுக்கு நடனமாடிய விவகாரம் தொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
3 நாட்களுக்கு முன்பாக அரசுப் பள்ளியில் மாணவர்கள் பாமக துண்டுடன் சாதிய பாடலுக்கு நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பலரும் பள்ளிக் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்று கொந்தளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் மாணவர்கள் திடீரென கழுத்தில் பாமக கட்சி துண்டை போட்டுக் கொண்டு மறுமலர்ச்சி படத்தில் இடம்பெற்ற புகழ் இருக்குது, பெயர் இருக்குது ராசி படையாட்சிதான் என்ற பாடலுக்கு நடனமாடினர். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் டீ-ஷர்டில் காடுவெட்டி குரு மற்றும் சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது, இந்தி திணிப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் மொழிப்பெயர்ப்பாளர்களை உருவாக்க விரும்பவில்லை. விஞ்ஞானிகள், மருத்துவர், பொறியாளரை உருவாக்க விரும்புகிறோம். நாம் அனைவரும் இருமொழிக் கொள்கையை படித்துவிட்டுதான் இந்த இடத்திற்கு உயர்ந்துள்ளோம். அதனால் நம் பிள்ளைகளும் அப்படியே படிக்க ஆசைப்படுகிறோம். பிள்ளைகளுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க கூடாது. எங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டால், எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்வார்கள். அதனை ஒரு வாய்ப்பாக மட்டுமே வழங்க வேண்டும். கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் திணிப்பாக இருக்க கூடாது. எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி கிடையாது. யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். தலைமையாசிரியர் இடமாற்றம் ஆனால் இந்தியை கற்றுக் கொண்டால்தான் பணம் தருவேன் என்று சொல்வது கிட்டத்தட்ட பிளாக்மெயில் செய்வதை போல் உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பாமக துண்டு போட்டு மாணவர்கள் நடனமாடிய விவகாரம் தொடர்பான கேள்விக்கு, மாணவர்கள் கட்சித் துண்டு போட்டு சாதிய பாடலுக்கு நடனமாடிய விவகாரத்தில் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் என்ன நடந்தாலும், அதற்கு தலைமையாசிரியரே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.