ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகான முதல் பட்ஜெட்டை முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதைத்தொடர்ந்து மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு பிடிபி-பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன்பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க கடந்த 2019-ல் முடிவெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு, நீண்ட நாட்களாக தேர்தல் நடத்தாமல் இருந்துவந்த நிலையில், கடந்த 2024-ல் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு துறைகளில் சிறந்த ஒத்துழைப்பு வழங்கி வருவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் 2.88 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வேளாண் துறைக்கு ரூ.815 கோடியும், சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.390.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.