தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது: எல்.முருகன்!

தமிழ்நாட்டில் பெண்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை, பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது. ரயிலில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக திமுக அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் மூன்று மொழி வேண்டும் என்று கேட்கிறார்கள், மெட்ரிகுலேஷன் சி.பி.எஸ்.சி பள்ளிக் கூடங்களில் படிப்பவர்கள் மூன்று மொழி படிக்கிறார்கள். சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகின்றது. பணம் இருப்பவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பணம் இல்லாத ஏழை, எளிய மக்கள், அதிகமாக அரசு பள்ளிகளில் தான் படித்துக் கொண்டு இருக்கின்றனர். அப்படியானால் அந்த மாணவர்களுக்கான மொழியை கற்கக்கூடிய வாய்ப்பை மறுக்கிறார்கள். இவர்கள் நவீன தீண்டாமையைதான் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மூன்று மொழி வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாகும். டாக்டர் ராமதாஸ் மும்மொழி கொள்கை மோசடி கொள்கை என விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்கு, பாரதிய ஜனதா கட்சி மூன்று மொழி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது. கூட்டணியில் இருப்பதால் இதை மட்டுமே கூற வேண்டும் என்பது இல்லை, கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவதற்காக மட்டுமே. அதனால் நாங்கள் முன்மொழிக் கொள்கை வேண்டும் என்று எங்கள் கூற்றில் உறுதியாக இருக்கிறோம்.

மகளிர் தின வாழ்த்துக்கள் கூறிய விஜய், தமிழக அரசை விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டுக்காக, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் கொண்டு வந்திருக்கிறார். மகளிருக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும், முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் தாய்மார்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை, பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கு இருக்கிறது. ரயிலில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றால், திமுக அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டும் என தெரிவித்தார்

மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியை தாய் மொழியில் படிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார். ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்கனவே தமிழ் மொழியில் பாடங்கள் கொண்டு வந்து போதுமான ஆதரவு இல்லாததால் கைவிடப்பட்டது குறித்த கேள்விக்கு, மத்தியபிரதேஷ் போன்ற மற்ற மாநிலங்களில், கட்டாயமாக அவர்கள் தாய்மொழி வழிக் கல்வியில் கல்வியை கற்கிறார்கள். அவர்கள் அதை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்புகள் வருகிறது. இங்கேயும் கட்டாயமாக அதை நடைமுறைப்படுத்தும் பொழுது நிச்சயம் வாய்ப்புகள் வரும்.

மீன்வளம் மற்றும் மீனவர்களை பொறுத்தவரை, பிரதமர் மோடி வந்த பிறகு தான் மீனவர்களுக்காக ஒரு புதிய அமைச்சகத்தையே உருவாக்கினார். கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2014 க்கு முன்பு வெறும் 400 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் அடிப்படை தேவைகள், துறைமுகங்களை வலிமைபடுத்துவது, போன்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தது பிரதமர் மோடி காலத்தில் தான். பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகு, மீனவர்கள் மீது ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கூட நடைபெறவில்லை. மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது உடனடியாக மத்திய அரசாங்கம் தலையிட்டு மீனவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருகிறார்கள். பேச்சுவார்த்தை மூலமாக தொடர்ந்து மீனவர்களை பத்திரப்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.