தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி!

தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது. சீரான முறையில் மின்சாரம் விநியோகிக் மின்வாரியம் தயாராக உள்ளது என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 1973 சுயஉதவிக் குழுக்களுக்கு, ரூ. 170 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் சாதனைத் திட்டங்கள், மகளிரை மையப்படுத்தித்தான் இருக்கும். கடந்த ஆண்டுகளைப்போலவே, வரும்ஆண்டுகளிலும் எவ்வளவு மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறதோ, அதற்கேற்ப மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது. சீரான முறையில் மின்சாரம் விநியோகிக்க மின் வாரியம் தயாராக உள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை முழுமையாக முடிந்தபிறகு, இதுகுறித்த கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன். சில இடங்களில் இன்னும் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. அவர் ஒரு நிலைப்பாட்டில் இருந்ததில்லை. தெளிவான முடிவில் இருந்ததும் இல்லை. தெளிவான கருத்துகளை என்றும் முன்வைத்ததில்லை. மக்களுக்கான தமிழக அரசு, எல்லோருக்குமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 352 பயனாளிகளுக்கு, ரூ.3.74 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை செந்தில்பாலாஜி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், எம்.பி. கணபதி ராஜ்குமார், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தனர். மேலும், மகளிர் தின விழாவையொட்டி 12 சாதனை மாணவிகளுக்கு விருது, சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.