ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல: சீமான்

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திமுகவுக்கான எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதில் முதன்மையான பங்கு என்னுடையதாக இருக்கும், நான் மட்டும் தனியாகத்தான் இருப்பேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலில் சமச்சீர் கல்வி என்று ஒன்றைக் கொண்டு வந்தார்கள், அதற்கு பெயர் சமச்சீர் பாடத் திட்டம், சமச்சீர் கல்வி கிடையாது. கிராமங்களில் வைத்து இருக்கும் மாணவர்களின் புத்தகமும் நகர்ப்புற மாணவர்கள் வைத்து இருக்கும் புத்தகமும் ஒன்றுதான், ஆனால், கல்வி அங்கு சமச்சீராக இல்லை. நகர்ப்புறங்களில் படிப்பவனுக்கு குளிரூட்டப்பட்ட அறை, விளையாட்டு திடல் போன்றவைகள் எல்லாம் உள்ளது. ஆனால் கிராமப்புறத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த வசதிகள் எல்லாம் இருக்கிறதா?

சிற்றூர்களில் எல்லாம் மூன்றாம் தர ஆசிரியர்களைதான் பணி நியமனமே செய்கிறீர்கள். முதல் தர ஆசிரியர்களை நகர்ப்புற பள்ளிக்கூடங்களில் பணியமர்த்துகிறீர்கள். அவர்களெல்லாம் தனியார் பள்ளியை நோக்கி சொல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு, ”எங்கு நின்றாலும் நான் தனித்துதான் நிற்பேன்; இந்த நாட்டு மக்களுக்கு ஒரு நோய் இருக்கிறது, கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என கேட்கிறீர்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என யாரையும் கேட்பதில்லை, கொள்கை இல்லாமல் கூட்டணி இருந்தால் வென்று விடலாம் என்ற நிலையை வரவேற்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடத்திய இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு, ”எனது உறவுக்காரர்கள் நிறைய பேர் இஸ்லாம் மதத்தில் இருக்கிறார்கள். ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நான் கிடையாது. இதுபோன்று செய்வது விஜய்யிக்கு பிடித்து இருக்கிறது, அதனால் அவர் செய்கிறார். அவர் சென்று வந்ததால் எந்த பாதிப்பும் எங்களுக்கு இல்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் இதனால் என்ன பிரச்னையும் இல்லையே. அதனால் அதைப் பற்றி பேச தேவையில்லை” என்றார்.