உங்க எம்பிக்களை முதலில் தொகுதிக்கு அனுப்புங்க ஸ்டாலின் அவர்களே: தமிழிசை சௌந்தராஜன்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில் நேற்றைய தினம், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக குரல் எழுப்பவும், 7 மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து குரல் எழுப்பவும் எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் விமர்சனம் செய்து உள்ளார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்கள் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும், அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். முதல்வர் அவர்களே முதலில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அவரவர்களின் பாராளுமன்ற தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள். ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூட சொல்ல அவர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை.. திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை. அவர்களை நீங்கள் மற்ற மாநில முதல்வர்களை சந்திக்க சொல்கிறீர்கள்.. முதலில் வாக்களித்த பாராளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள் பின்பு மற்ற மாநில மக்களை சந்திக்கலாம்.

முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்க பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம்.. தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க.. இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.. மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொகுதி வரையறையில் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும்.. அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.