இஃப்தாா் நோன்பு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிப்பு: விஜய் மீது புகார்!

சென்னையில் இஃப்தாா் நோன்பு நிகழ்ச்சி நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) இஃப்தாா் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தாா் நோன்பு நிகழ்ச்சி மூலம் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், விஜய் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் பொருளாளர் சையத் கௌஸ் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சையத் பேசியதாவது:-

விஜய் ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் இழிவுபடுத்தப்பட்டனர். நோன்பு இருக்காத, இஃப்தாருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத குடிகாரர்கள் மற்றும் ரெளடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றது அவமதிப்பாக கருதுகிறோம். எங்களின் பண்பாட்டு நிகழ்ச்சியை அவமதித்துள்ளனர். சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல், வெளிநாட்டு பாதுகாவலர்கள் மூலம் அங்கிருந்தவர்களை விலங்குகளை போல் நடத்தியுள்ளனர். மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.