இரண்டு நாள் பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் தரம்பீர் கோகுலுக்கு மகா கும்பமேளா கங்கை நீரையும், மக்கானாவையும் பரிசாக அளித்தார்.
மொரீஷியஸ் அதிபர் தரம்பீர் கோகுலை, அரசு மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்தியா – மொரீஷியஸ் இடையே சிறப்பான மற்றும் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறும் மக்களுக்கு இடையே வலுவான இணைப்புகளும் இருப்பதை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
மொரீஷியஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் இரண்டாவது முறையாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது தமக்கு கிடைத்த கவுரவம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். சிறப்பு அடையாளமாக, அதிபர் கோகுல் மற்றும் அவரது மனைவி விருந்தா கோகுல் ஆகியோருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற அடையாள அட்டைகளைப் பிரதமர் வழங்கினார். அதிபர் தரம்பீர் கோகுலுக்கு மகா கும்பமேளா கங்கை நீரையும், மக்கானாவையும் பரிசாக அளித்தார்.
இந்திய அரசின் ஒத்துழைப்புடன் அரசு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத தோட்டத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தின் பலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவின் முக்கிய பங்குதாரராக மொரீஷியஸ் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்குப் பின், பிரதமரை கவுரவிக்கும் வகையில் அதிபர் கோகுல், மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
முன்னதாக, பம்பிள்மவுசஸ் தாவரவியல் பூங்காவில் உள்ள சர் சீவூசாகுர் ராம்கூலம் மற்றும் சர் அனிரூத் ஜூக்நாத் ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அப்போது மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலமும் பிரதமருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மொரீஷியஸின் முன்னேற்றம் மற்றும் இந்திய-மொரீஷியஸ் உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் இரு தலைவர்களின் நீடித்த மரபுகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து, பிரதமர் மோடியும், மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமும் வரலாற்றுச் சிறப்புமிக்க பூங்காவில் “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்ற முன்முயற்சியின் கீழ் ஒரு மரக்கன்றை நட்டனர்.