நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நல்லா பைட் பண்ணுங்க என ஆதரவு கொடுத்ததற்கு, சீமான் மீது பலாத்கார புகார் தெரிவித்த நடிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் மீது பலாத்கார புகார் தந்த நடிகை வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய கேஸ் வைத்துக் கொண்டு சீமானை திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்டுகளும் ஒரே அடியாக அடிப்பது போலவும், இதில் சீமான் சோர்வு அடையக் கூடாது; நன்றாக போராட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அண்ணாமலை மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் உங்கள் நண்பர் சீமான், ஈழத்திற்காக போராடியோ; கச்சத்தீவை மீட்கப் போராடியோ வழக்கை வாங்கவில்லை. உங்க நண்பர் சீமான், ஈழத்தில் தமிழர்கள் செத்துக் கொண்டிருந்த போது என்னுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவர். அப்படி குடும்பம் நடத்திய போது என் காசை எல்லாம் பிடுங்கிக் கொண்டவர்; பாலியல் ரீதியாக என்னை துன்பப்படுத்தி தெருவில் விட்டவர். இது பற்றி யாராவது சீமானிடம் கேட்டால், என்னை யார் என்றே தெரியாது என இதுநாள் வரை கூறி வந்தார். இப்ப திமுக கால கட்டத்தில்தான் கேட்க வேண்டிய விதத்தில் கேட்டதால், ஆமாம் நடிகையுடன் குடும்பம் நடத்தினேன் என ஒப்புக் கொண்டார் சீமான். இதை அண்ணாமலை பார்க்கவில்லையா?
இதைவிட உலகமே காரித்துப்புகிற மாதிரி, அவ பாலியல் தொழிலாளி என சீமான் சொன்னாரே அதை அண்ணாமலை பார்க்கவில்லையா? திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் ஏதோ சொல்லிவிட்டார் என சொல்லி ஒட்டுமொத்த பாஜகவும் இறங்கி போராடியது; குஷ்பு எல்லாம் பெரிய அளவில் குரல் கொடுத்தாங்க.. ஆனால் என்னை பாலியல் தொழிலாளி என சீமான் சொன்ன போது, ஏன் உங்க பாஜக கட்சியில் இருந்து யாருமே குரல் கொடுக்கவில்லை? என் விஷயத்தில் எந்த அரசியலும் இல்லை அண்ணாமலை அவர்களே! உண்மையில் சீமானை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவதே ஏதோ ஒரு பெரிய ஷக்திதான் என தோன்றுகிறது. இதனால்தான் திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்டுகளும், பாவம் என எனக்கு ஆதரவாக நேர்மையாக குரல் கொடுக்கின்றனர். சீமான், உங்களது (அண்ணாமலை) நண்பராக இருக்கலாம்; ஆனால் சீமான் மாதிரி ஒருவருக்கு அண்ணாமலை குரல் கொடுத்தால் உங்களை தவறாக நினைக்கமாட்டாங்களா? இவ்வாறு நடிகை வீடியோவில் கூறியுள்ளார்.