சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில் அமர்ந்திருந்த சீமானின் கைய பிடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “அண்ணா விட்றாதீங்க ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க” என ஊக்கம் கொடுத்தார்.
நிர்வாகிகள் தொடர் விலகல், நடிகை கொடுத்த பாலியல் புகார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அடுத்தடுத்து சிக்கல் முளைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஆறுதல் அளிக்கும் விதமாக நடிகை அளித்த புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது. ஆனாலும் நாம் தமிழர் கட்சி சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. காரணம் பெரியார் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பெரியாரிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
அதே நேரத்தில் அவரது கட்சி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வருவது சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சீமானுக்கு ஊக்கம் தருவது போல பேசி இருக்கிறார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
சென்னையில் இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சீமான் தனது காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது எதிரே வந்த அண்ணாமலை காரின் அருகே சென்றார். தொடர்ந்து காரின் கண்ணாடியை இறக்கிவிட சீமானின் கையைப் பிடித்த அண்ணாமலை, “அண்ணா ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க.. விட்றாதீங்க.. ஸ்ட்ராங்கா இருங்க” என கூறிவிட்டுச் சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.