தயாநிதி மாறன் வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு!

திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய சென்னை தொகுதி கூட்டி கட்சி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். உண்மைக்கு மாறாகவும் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிச்சாமி கூறியுள்ளதாக தயாநிதிமாறன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தார். அதற்கு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல வழக்கு என எண்ணிட கூடாது எனவே எந்த இந்த மனுவை ஏற்க கூடாது என தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேகானந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வழக்கு அண்மையில் மீண்டும் விசாரணை வந்தபோது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுவிக்கக் கூடிய மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதனிடையே தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஏற்கனவே செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் பேசியதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசும் பேச்சுக்கள் அவதூறாகாது என்பதால், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.