பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அனுமதி பெறாமல் வழக்குப் பதிவு செய்தது எப்படி?: உயர் நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவுபடி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த ஐஜி பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அனுமதி பெறாமல் வழக்குப் பதிவு செய்தது எப்படி? என சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைக்க உதவியது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐ-க்கு உத்தரவிடக்கோரி அதே பிரிவில் டி.எஸ்.பியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காதர்பாட்ஷா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகார் குறித்த முதல் கட்ட விசாரணை நடத்தி, புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவிட்டார்.

அதன்படி சிபிஐ விசாரணை நடத்தி பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில் முதல்கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு பொன்.மாணிக்கவேல் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து சிபிஐ விசாரணை அறிக்கை நகல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிலை கடத்தல் வழக்குகளை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்தார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். உரிய தகவல்கள் இல்லாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான தகவல்கள் இல்லாமல் எப்ஐஆர் எப்படி பதிவு செய்யலாம்?. யார் மீது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் போதுமான தகவல்கள் இல்லாமல் இவ்வாறு சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியுமா? இது விசாரணைக்கு தடை விதிக்க போதுமானது” என்றார்.

பின்னர் சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. அதோடு கடந்த விசாரணையின் போது மூடி முத்திரையிட்ட கவரில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் பொன் மாணிக்கவேல் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதற்கான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இதனையடுத்து நீதிபதி, சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலர்கள் காணொலி காட்சி வழியாக ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.