திருமணமான மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ‘மக்கள் முதல்வரின் மனித நேய விழா’ என்ற பெயரில் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்தவகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று 72 இணையர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
அமைச்சர் சேகர்பாபு ஆயிரக்கணக்கான திருமணங்களை செய்து வைத்து உள்ளார். 3 ஆண்டுகளில் மட்டும் 1700 திருமணங்களை அவரது துறை சார்பாக நடத்தி வைத்துள்ளார். அந்த வகையில் இன்று 72 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார். சீர்திருத்த முறையில், சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இதில் கலப்பு திருமணங்கள் மட்டுமின்றி, காதல் திருமணங்கள் இருக்கும் என நம்புகிறேன். இந்த காலத்தில் கலப்பு திருமணம் நடப்பது பெரிய விசயம். அதில் காதல் திருமணம் என்பது இன்னும்.. எனக்கும் காதல் திருமணம்தான். ஆனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்னையும் இல்லை.
ஆணும், பெண்ணும் சரிசமமாக உட்கார வைக்கப்பட்டு இந்த திருமணங்கள் நடைபெற்றுள்ளது. ஒருகாலத்தில் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. இன்றைக்கு முற்போக்கு திருமணங்கள் நடக்கிறது என்றால் இதற்கு காரணம் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான். திமுக அரசு அமைந்த பிறகு மகளிர் முன்னேற்றத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயண திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.800 முதல் 850 ரூபாய் வரை சேமிக்கிறார்கள். இதுமட்டுமின்றி காலை உணவுத் திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் உரிமை திட்டம் என பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து கொண்டு இருக்கிறார்.
திருமணமான மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், நிறைய பெற்றுக்கொள்ளாதீர்கள். அதையும் மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்று கூறியது. அதை வெற்றிகரமாக செயல்படுத்தியது தமிழக அரசு. அதனால்தான் இப்போது தண்டிக்கப்படுகிறோம்.
இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறைந்துவிடும். தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடி ஆகும். ஆனால், குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாத மாநிலங்கள் இதனால் நன்மை அடையப்போகின்றன. வட மாநிலங்கள் 100 தொகுதிகள் வரை பெறப்போகின்றன. எனவே தான் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.