இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ்!

தேசிய கல்விக் கொள்கையை விட சிறப்பாக செயல்படும் அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்? வலுவான இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (மார்ச் 12) தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் 58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கின்றனர். 1,635 பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே தமிழ்நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. சிலர் கூறுவது போல், மூன்றாம் மொழியைக் கற்க வேண்டும் என்ற உண்மையான தேவை இருந்திருந்தால், எதற்காக மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தை தொடர்ந்து தேர்வு செய்கிறார்கள்? மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு மதிப்போம். ஆங்கிலம் ஏற்கனவே தமிழ்நாட்டின் இருமொழி கொள்கையின் ஒரு பகுதியாகும். இது மாணவர்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தைப் பேணுகையில் உலகளாவிய வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்கிறது.

தாய் மொழியான தமிழ் என்பது எங்களின் வேர், வரலாறு, மதிப்பு. தேவையின்றி மூன்றாவது மொழியை திணிக்காமல், ஆங்கிலத்தில் சிறப்பான பயிற்சி பெற்று சர்வதேச அளவில் எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்குவதை உறுதி செய்து வருகிறோம். ஆங்கில வழிப் பள்ளிகளில் கூட, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதில் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆகையால் தமிழ் எங்களின் பெருமை. ஆங்கிலம் உலகிற்கான வழிகாட்டி. இவ்வாறு இரண்டு மொழிகளில் மாணவர்கள் சிறந்து விளங்கும் போது மூன்றாவது மொழி என்பது தேவையில்லை. தமிழ்நாட்டின் கல்வி திட்டமானது சிறந்த வல்லுநர்களை, சிந்தனையாளர்களை, கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையை விட சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டு மாடலை ஏன் சீர்குலைக்க வேண்டும்? வலுவான இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. எங்கள் மாணவர்களுக்கு சிறந்தது எது என்பதை கண்டறிந்து வழங்குவதில் தமிழ்நாடு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. எனவே சாதனைகளை நிகழ்த்தி வரும் எங்களின் கல்வி திட்டத்திற்கு குறுக்கே வர வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.