நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு!

தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்த நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனாவிற்கு பிறகு பின் தங்கியுள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில் அவரது பேச்சை திரும்ப பெற வைத்தீர்கள். ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும் மாலை போட்டு வைத்துள்ளீர்கள்” என்றார்.

நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக பேசிய திமுக எம்பி கனிமொழி, பாஜக அரசு தினமும் தமிழ்நாட்டையும் எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது” எனக் கூறினார்.

இதற்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை குறித்தும் குறைகூறி பேசியதாக கூறி, அம்மாநில எம்.பி.க்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, “ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை அவமதிப்பதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. நேற்று, கல்வி மந்திரி அந்த அவமானத்தை ஏற்படுத்தினார். இன்று நிதி மந்திரி தமிழக அரசை அவமதிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தமிழ்நாட்டிற்கு திட்டங்களை வழங்குவதன் மூலம் ஏதோ தொண்டு செய்வது போல் காட்டுகிறார்கள். பா.ஜ.க. அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது” என்று அவர் கூறினார்.

நிதிமந்திரியின் பதிலுக்கு எதிராக மக்களவையில் இந்திய கூட்டணித் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததை குறித்து காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறுகையில், “நிதிமந்திரி தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிட்டு தமிழ்நாட்டை மோசமாகக் காட்ட முயன்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அவதூறு செய்ய மத்திய மந்திரிகள் பலமுறை முயற்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன” என்று அவர் கூறினார்.