புதுச்சேரியில் 21 முதல் 55 வயது வரை அரசின் எவ்வித மாதாந்திர உதவித் தொகை பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தரப்படுகிறது. இந்த நிதியாண்டு முதல் இந்த உதவித் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 2025-26 நிதியாண்டு பட்ஜெட் திட்ட மதிப்பீடு ரூ.13,600 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் விவரம்:
* தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முதல் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு அறிமுகப்படுத்தப்படும். விவசாய தொழிலாளர் நலச்சங்கத்தில் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணமாக ஆண்டுக்கு ரூ.2,000 வரும் நிதியாண்டு முதல் தரப்படும். வனமில்லா பகுதிகளில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
* கடந்த 2015 முதல் 2021 வரையிலான ஆண்டுகளுக்கான தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும். புதிதாக சொற்பொழிவாளர், புகைப்படம், திரைப்படம், ஆவணப்படம் ஆகியத்துறைகளுக்கும் கலைமாமணி விருது வரும் நிதியாண்டு முதல் தரப்படும். காரைக்கால் அம்மையார் பெயரில் விருது வழங்க உத்தேசித்துள்ளோம்.
* பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடக்கவுள்ளது. வரும் நிதியாண்டு முதல் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவச அரிசியோடு 2 கிலோ கோதுமை இலவசமாக தரப்படும்.
* பாண்லேயில் ஐஸ்கிரிம் தயாரிக்கும் பிரிவு நிறுவப்படவுள்ளது.
* மதிய உணவுத்திட்டத்தில் வாரம் 3 நாட்களுக்கு தரப்படும் முட்டை வரும் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளி நாட்களிலும் தரப்படும்.
* பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித் திட்டத்தின் கீழ், சென்டாக் மூலம் தேர்வாகும் மருத்துவம், பொறியியல், செவிலியர் பாடப்பிரிவுகளில் சேர்வோருக்கு நிதி உதவி தரப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சென்டாக் மூலம் சேர்க்கை பெறும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நிதியுதவி விரிவுப்படுத்தப்படும்.
* அரசு பள்ளியில் படித்து நீட் பாடப்பிரிவுகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அனைவருக்கும் 100 சதவீதம் கட்டண விலக்கு தரப்படும். அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, கல்லூரிகளில் இளநிலை படிக்கும் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஊக்குவிப்புத் தொகை இந்தக் கல்வியாண்டு முதல் தரப்படும்.
* காரைக்காலில் செயற்கை தடகளப்பாதை அமைக்கப்படும்.
* திருக்கோயில்களில் ஒருகால பூஜைக்காக தற்போது தரப்படும் நிதியுதவித்தொகை ரூ.20,000-லிருந்து ரூ.30,000 உயர்த்தி தரப்படும்.
* கிழக்கு கடற்கரைச்சாலையில் அமையவுள்ள புதிய பஸ் நிலையத்துக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சிறைக் கைதிகளின் தகவல்கள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். ஏழை சிறைக் கைதிகள் நலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான சட்டஉதவி, திறன் மேம்பாட்டு திட்டம் தரப்படும்.
* புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் மறு நிலஅளவை ட்ரோன் சர்வே நடத்தப்படும். மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா மண்டலம் அமைத்து அரசு – தனியார் பங்களிப்புடன் தீம் பூங்காக்கள், ஓய்வு விடுதிகள், மாநாட்டு கூடங்கள் அமையும்.
* விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்க நிலம் கையகப்படுத்த முதல்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மின் வாகனங்களுக்கு சாலை வரியில் 50 சதவீதம் சலுகை தரப்படும். ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு சிறப்புக்கூறு திட்டநிதி ரூ. 526.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாத, கணவரை இழந்த, வேலையற்ற ஆதிதிராவிட பழங்குடியின பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 அவர்களுக்கு திருமணமாகும் வரை மற்றும் பணிக்குச்செல்லும் வர தரப்படும்.
* ஆதிதிராவிட, பழங்குடியின முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தற்போது தரப்படும் ஓய்வூதியத்துடன் ரூ.500 கூடுதலாக தரப்படும். பெற்றோரை இழந்த ஆதிதிராவிட பழங்குடியின குழந்தைகளுக்கு 18 வயது வரை கல்வி, அடிப்படை தேவைகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் தரப்படும்.
* இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது தரப்படும் ரூ.5,000 இனி ரூ.8,000 உயர்த்தி வழங்கப்படும். முதுகலை படிப்போருக்கு தரப்படும் ஆண்டுக்கு ரூ.6,800 தொகை ரூ.9,800 ஆக உயர்த்தப்படும்.
* புதுச்சேரியில் 21 முதல் 55 வயது வரை அரசின் எவ்வித மாதாந்திர உதவித்தொகை பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. இந்த நிதியாண்டு முதல் இந்த உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி தரப்படும்.
* அரசு மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் தலா ரூ.500 உயர்த்தி தரப்படும்.
* வருவாய்த் துறை, உள்துறை, கல்வித்துறை, வேளாண்துறை, சுகாதாரத்துறை, மின்துறை கலை பண்பாட்டுத் துறை ஆகியவற்றில் 2298 பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் நிரப்பப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.