நீண்டகால அமைதி, இருதரப்பு பொருளாதார உறவுகள்; சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரானது 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்தும் உள்ளனர். உக்ரைனுக்கு பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவளித்தது. ஆயுதம் மற்றும் நிதியுதவியையும் வழங்கியது. ஆனால், டிரம்ப் தலைமையிலான அரசு உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கி வருகிறது. இதன்படி, உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது.
இந்த சூழலில், உக்ரைனுக்கு அளித்து வந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதக நிலையை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கேற்ப டோனெட்ஸ்க், ஒடிசா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதலை தொடுத்தது. இதில் பொதுமக்களில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால், போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை அவசியத்திற்கு உரிய ஒன்றாகி உள்ளது.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை ஜெட்டா நகரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், உக்ரைன் நாட்டுக்கான நீண்டகால அமைதியை மீட்டு கொண்டு வருவது மற்றும் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டது.
இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் ஜெலன்ஸ்கி வெளியிட்டு உள்ள செய்தியில், அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வரும் இளவரசருக்கும், முக்கிய பங்கு வகிக்கும் சவுதி அரேபியாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உக்ரைனின் வருங்காலம் பற்றிய நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை கேட்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பதிவிட்டு உள்ளார். இதேபோன்று உக்ரைனின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜெட்டா நகரிலேயே தங்கியுள்ளனர். அவர்கள் அமெரிக்க அதிகாரிகளை இன்று சந்தித்து பேச உள்ளனர்.
சவுதி அரேபிய இளவரசருடனான ஆலோசனையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மற்றும் நம்பத்தகுந்த அமைதியொன்றை ஏற்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் பற்றி விரிவான அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதேபோன்று, கைதிகளை விடுவிப்பது மற்றும் உக்ரைனிய குழந்தைகளை திரும்ப அழைத்து வருவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது என ஜெலன்ஸ்கி கூறினார்.
இதையடுத்து நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உக்ரைன் சார்பில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் Chief of Staff பொறுப்பில் உள்ள அன்ட்ரி எர்மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மொத்தம் 7 மணிநேரம் வரை பூட்டிய அறையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் 5 முக்கிய டீல் செய்யப்பட்டன. அதில் ஒன்று தான் 30 நாட்கள் உடனடியாக போர் நிறுத்தம் செய்வது. அதாவது உக்ரைனுக்கான பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். உளவு தகவல்கள் மற்றும் ஆயுத பகிர்வை வழங்க ஒப்புதல் செய்யப்பட்டது. 2வது 30 நாட்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும். ரஷ்யாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டு இதனை செயல்படுத்த வேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
3வது உக்ரைன் நாட்டு கைதிகள், பொதுமக்கள், குழந்தைகளை ரஷ்யா விடுவிக்க வேண்டும். 4வது போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பா ஒருபகுதியாக இருக்க வேண்டும். 5வது கனிமவள ஒப்புதல் தொடர்பாக ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா – உக்ரைன் இடையே நீண்டகால உறவை பேண வேண்டும். உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்ற 5 முக்கிய விஷயங்கள் முடிவு செய்யப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை என்பது உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தத்துக்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வாரா? என்ற கேள்வி என்பது எழுந்துள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். இதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‛‛உக்ரைன் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இனி நாம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ரஷ்ய அதிபர் (விளாடிமிர் புதின்) போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறோம். நகரங்கள் முழுவதும் குண்டுகள் வீசப்படும்போது ஏராளமான மக்கள் இறந்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும். எனவே போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். இந்த போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் அது பெரிய விஷயமாக இருக்கும்” என்று கூறினார்.