தியாகிகளை நினைவு கூறுகிற வகையில், நெல்லையில் உள்ள வ.உ.சி. மணி மண்டபத்திற்குள் நினைவுத் தூண் ஒன்றை அமைக்க வேண்டுமென செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில், 1908 இல் தியாகச் செம்மல் வ.உ.சி. உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மக்கள் தன்னெழுச்சியாக மார்ச் 13 அன்று நடத்திய போராட்டம் நெல்லை எழுச்சி என வரலாற்றில் குறிக்கப்படுகிறது. அந்த நாளில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஆயிரக்கணக்கான நெல்லை, தூத்துக்குடி மக்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் 5 பேர் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள்.
மேலும், நெல்லைச் சீமையில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா மற்றும் வ.வே.சு. ஐயர், வாஞ்சிநாதன், மகாகவி பாரதி போன்றவர்களெல்லாம் அந்தப் பகுதியில் இருந்து தான் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க தியாகிகளை நினைவு கூறுகிற வகையிலும், நெல்லை எழுச்சியின் அடையாளமாகவும் நெல்லையில் உள்ள வ.உ.சி. மணி மண்டபத்திற்குள் நினைவுத் தூண் ஒன்றை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.