வத்தலகுண்டு சுங்க சாவடி மீது தாக்குதல்: 300 பேர் மீது வழக்கு!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திறக்கப்பட இருந்த லட்சுமிபுரம் சுங்க சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடியது தொடர்பாக பொதுமக்கள், விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் மீது பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்லில் இருந்து கேரளாவின் குமுளி வரை செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமானது. திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நகருக்குள் செல்லாமலேயே புறவழிச் சாலையில் செல்கிறது இந்த தேசிய நெடுஞ்சாலை. திண்டுக்கல்லை அடுத்து செம்பட்டி, பட்டிவீரன்பட்டி, வத்தலகுண்டு புறவழிச்சாலை வழியாக பெரியகுளம், தேனி, கம்பம், கூடலூர்- குமுளி செல்கிறது இந்த நெடுஞ்சாலை. இந்த சாலை விரிவாக்கப்பணிகள் 2010-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக சாலை விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தொகை ரூ333.13 கோடி. இந்த நெடுஞ்சாலையில் தேனி உப்பார்பட்டி அருகே 3 ஆண்டுகளுக்கு முன்னரே சுங்கச் சாவடி திறக்கப்பட்டு கட்டண வசூல் நடைபெற்று வருகிறது.

இதேபோல பட்டிவீரன்பட்டி- சேவுகம்பட்டி பகுதியில் லட்சுமிபுரத்தில் புதிய சுங்கச் சாவடி ஒன்றை அமைத்தது தேசிய நெடுஞ்சாலை. ஆனால் இந்த சுங்கச் சாவடியை அமைக்க தொடங்கிய நாள் முதலே அப்பகுதி கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்; இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமலேயே சுங்கச் சாவடி அமைக்கும் பணியை நிறைவு செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

இந்த நிலையில்தான் சாலை பணிகளே முழுமை அடையவில்லை; மின்விளக்கு வசதிகளும் இல்லை; இந்த நிலையில் சுங்க கட்டணம் வசூல் எதற்கு என்ற கேள்விகளுடன் நேற்று திறக்கப்பட இருந்த லட்சுமிபுரம் சுங்கச் சாவடியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது சுங்கச் சாவடியை பொதுமக்கள் ஆத்திரத்துடன் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் சுங்க சாவடி ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு உயிரை கையில் பிடித்தபடி ஓடிப் பதுங்கிக் கொண்டனர். பட்டிவீரன்பட்டி சுற்றுவட்டார பொதுமக்களின் தன்னெழுச்சியான இந்த ஆவேசப் போராட்டத்தால் லட்சுமிபுரம் டோல்கேட் பகுதியே போர்க்களமாக மாறியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டிவீரன்பட்டி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் லட்சுமிபுரம் டோல்கேட்டை சூறையாடியதாக அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் என 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.