நாடாளுமன்றத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் யாருமே நிதானமாகவே இல்லை; ஒருவேளை ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்களோ என்னவோ? ஏனெனில் பாஜகவின் பலம் வெறும் 240 எம்.பிக்கள் மட்டும்தான் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:-
மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் என் மீது ஒரு குற்றம்சாட்டி உள்ளார். தாம் 2 முறை தமிழ்நாட்டுக்கு வந்ததாகவும் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்முடைய கூட்டத்துக்கே வரவில்லை என கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை முன்னிட்டு அரசு விழா நடைபெற்று வந்தது. அது அரசு நிகழ்ச்சி; அதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றோம். இருந்த போதும் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறினேன்; அவரும் நிதியை வழங்குவதாக உறுதியளித்தார்; என்னுடன் தொலைபேசியில் இயல்பாகத்தான் அப்போது பேசினார் சிவராஜ் சிங் சவுகான். ஆனால் இதை மறந்துட்டார் போல.
எனக்குப் பார்க்க பாஜகவின் மந்திரிகள் (அமைச்சர்கள்), உறுப்பினர்கள் (எம்பிக்கள்) யாருமே நிதானமாக இருப்பதாக தெரியவில்லை நாடாளுமன்றத்தில்.. ஒருவேளை இந்த ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை..ஏனெனில் பாஜகவுக்கு 240 எம்பிக்கள்தான் இருக்கின்றனர். மத்தியில் பாஜக ஒரு மைனாரிட்டி அரசு. ஆனால் தமிழ்நாட்டில் திமுக மெஜாரிட்டி அரசாங்கம். அதனால் பாஜக ஆட்சி கவிழ்ந்துவிடும் என நினைக்கிறார்கள். அந்த பதற்றம்தான் அதிகமாக இருக்கிறது.
பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.. பீகாரில் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழ்ந்தாலும் கவிழ்ந்துவிடுமே.. என்ற பயம் பாஜகவுக்கு இருக்கிறது. அதனால்தான் பாஜகவினர் பதறுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.