சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்!

அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் கிட்டதட்ட 9 மாதங்களாகவே விண்வெளியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர்களை அமெரிக்கா அழைத்து வரவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்று வீரர்களையும் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் நாசா அனுப்பவிருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள மூத்த விண்வெளி வீரர்களில் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ்.. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே 2 முறை நாசாவுக்காக விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். கடந்த 2006 மற்றும் 2012 ஆகிய இரண்டு முறை அவர் விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். இதற்கிடையே அவர் கடந்தாண்டு 3வது முறையாக விண்வெளிக்குப் புறப்பட்டார். புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரரும் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றனர்.. போயிங் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் அவர்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். முதலில் அவர்கள் 8 நாட்களில் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு பூமி திரும்புவதாக இருந்தது. இருப்பினும், போயிங் ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாமல் போனது.

முன்பெல்லாம் நாசா தனது சொந்த விண்கலம் மூலமாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும். ஆனால், இப்போது செலவுகளைக் குறைக்க நாசா தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸை போயிங் ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது. அதில் இருந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாத நிலையில், போயிங் ராக்கெட் மட்டும் தனியாகப் பூமிக்குத் திரும்பியது. இதற்கிடையே அதிபரான டிரம்ப், இரு வீரர்களும் விண்வெளியில் சிக்கித்தவிக்க பைடன் நிர்வாகமே காரணம் எனச் சாடினார். மேலும், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் அவர்கள் பூமிக்கு அழைத்து வருவார்கள் என அறிவிக்கப்பட்டது. டிரம்ப் உத்தரவின் பெயரில் இந்த பணியை முன்கூட்டியே நடத்தவும் திட்டமிட்டனர். அதன்படி புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை விண்வெளியில் ஏவப்பட்ட இருந்தது. அந்த ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட மாற்றுக் குழுவினரையும் ஏவ திட்டமிட்டிருந்தனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த இரு வீரர்களும், ஜப்பான் மற்றும் ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த தலை ஒரு வீரரும் இருந்தனர்.

இருப்பினும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவப்படுவது ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து இந்த ராக்கெட் எப்போது ஏவப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதம் ஆகியுள்ளது.