பேச அனுமதிக்காததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

சபாநாயகர் அப்பாவு பதவிநீக்க கோரிக்கையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும், டாஸ்மாக் முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காததால், அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்துவரும் சூழலில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின், அப்போதைய சபாநாயகர் தனபாலை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறிய கோரிக்கையை சட்டமன்ற விதிகளின்படி விவாதத்துக்கு எடுத்துக் கொண்டோம். அதேபோல், தற்போது அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொண்டு வந்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவி நீக்க கோரிக்கை திமுக அரசு விவாதத்துக்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

அதேபோல், கடந்த ஒருவார காலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களிலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், நேற்று அமலாக்கத்துறை செய்தி ஒன்றை வெளியிட்டது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை முடியும்போது, இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக சுமார், கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த அரசு அதுகுறித்து இதுவரை இன்னும் எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. அமலாக்கத்துறை சோதனை நடத்தி, அந்த சோதனை மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்த பிறகும், இந்த அரசு எந்த செய்தியும் வெளியிடாத காரணத்தால், இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிதிநிலை அறிக்கை தொடர்பான கேள்விக்கு, “முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபிறகு அதுகுறித்து கருத்துகளை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.