தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 46,767 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் என்று அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நாடே போற்றும் வகையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் 2025-26ஆம் நிதியாண்டிற்கான எல்லார்க்கும்_எல்லாம் நிதிநிலை அறிக்கையினை இன்று தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர். மேலும்,

* நகர்புறங்களில் செயல்படும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! 3.14 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான இத்திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 500 தலைசிறந்த தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.

* நாட்டின் பிற மாநில தலைநகரங்களிலும், பன்னாடுகளிலும் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் இந்தாண்டு முதல் நடத்தப்படும்.

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 2025-26ஆம் ஆண்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு!

* ரூ.65 கோடியில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.

* ரூ.56 கோடியில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!

* ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.

* 1,721 முதுகலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

* 388 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 500 அரசுப் பள்ளிகளில் ‘நான் முதல்வன் கல்லூரிக் கனவு’ திட்டத்தின் மூலம் உயர்கல்வி குறித்தான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

* தொலைதூர மலைப் பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு!

* சேலம், கடலூர், நெல்லையில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும். இதில் தலா 1 இலட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் குழு கூடம் இடம்பெறும்.

இந்த அறிவிப்புகளோடு மாநில உரிமைகளைக் காக்கும் வகையில் ‘எத்தகையத் தடைகள் வரினும் இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை தமிழ்நாடு அரசே கொடுக்கும்!’ என உறுதியோடு அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும் மாணவர்கள் ஆசிரியப் பெருமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.