பாஜகவுடன் இணைந்த பின் பவன் கல்யாணின் இந்தி நிலைப்பாடு மாறிவிட்டது: கனிமொழி!

2017ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கோ-பேக் இந்தி என்று பதிவிட்டுள்ள கருத்தை திமுக எம்பி கனிமொழி பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவுடன் இணைந்த பின் பவன் கல்யாணின் இந்தி நிலைப்பாடு மாறிவிட்டதாக விமர்சித்துள்ள கனிமொழி, மொழிகளைக் கடந்து திரைப்படங்களை ரசிக்க தொழில்நுட்பம் கைகொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று தெளிவாக அறிவித்துள்ள நிலையில், பாஜக தரப்பில் மும்மொழி கொள்கை கொண்டு வரப்பட வேண்டும் என்று தீவிரமாக பேசி வருகின்றனர். இதற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கமும் பாஜகவால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவர் கல்யாண் தனது கட்சியின் 12ஆவது ஆண்டு விழா கூட்டத்தில், மும்மொழி கொள்கை குறித்து தமிழக அரசியல்வாதிகள் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், தென்னிந்தியாவில் இந்தி மொழியை திணிப்பதாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அனைத்து மொழிகளும் நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான். தமிழ்நாடு இந்தியை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அங்கு இந்தி மொழி தேவையில்லை என்று சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அப்படியென்றால், ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? உத்தரப் பிரதேசம், பீகார், சட்டீஸ்கர் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து பணமும் தேடுகிறார்கள். பீகாரில் இருந்து தொழிலாளர்களை நம்பி இருக்கிறார்கள். ஆனாலும் இந்தியை வெறுக்கிறோம் என்று சொல்கிறார்கள். இந்தி வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு தமிழ்ப் படங்களை இந்தியில் டப் செய்ய அரசியல்வாதிகள் அனுமதிக்கிறார்கள். இது என்ன லாஜிக்? இந்தியாவின் ஒருமைப்பாட்டை குறைக்க முயற்சிப்பவர்களை எதிர்க்க என்னை போன்ற கோடிக்கணக்கான மக்கள் எழுந்து நிற்போம் என்று பேசி இருந்தார்.

பவன் கல்யாணின் பேச்சு தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் நடித்த படங்களை தமிழில் டப்பிங் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் பவன் கல்யாணின் கருத்துக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், மொழிகளை கடந்து திரைப்படங்களை ரசிக்க தொழில்நுட்பம் கைகொடுப்பதாக பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் 2017ஆம் ஆண்டு பவன் கல்யாண், இந்தி எதிர்ப்பு தொடர்பான கட்டுரையை பகிர்ந்து, கோ-பேக் இந்தி என்று கோஷமிட்டிருக்கிறார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பின், இந்திக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதற்கான ஆதாரங்களையும் கனிமொழி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பவன் கல்யாணின் எக்ஸ் பதிவையும், அவரின் வார்த்தைகளையும் பதிவிட்டுள்ள கனிமொழி, பவன் கல்யாணின் இரட்டை நிலைப்பாட்டையும் ஆதாரத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து திமுகவினர் பவன் கல்யாணை கடுமையாக சாடி வருகின்றனர்.