போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆண்டு கர்நாடக‌ முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சிஐடி போலீஸார், அவரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஜூனில் 750 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் சிஐடி போலீஸார் எடியூரப்பாவிடம் விசாரிக்க மேலும் 3 நாட்கள் அனுமதி கோரினர். இதனை ஏற்றுக் கொண்ட, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், மார்ச் 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், எடியூரப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மார்ச் 15-ம் தேதி சிஐடி போலீஸார் விசாரணைக்கு நேரில் ஆஜராக தேவையில்லை என உத்தரவிட்டது. மேலும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த சம்மனுக்கு இடைக்கால தடையும் விதித்தது.