ரூ.1,300 கோடி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அங்கு ஆட்சியில் இருந்தது. இதன்படி டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளுக்கு ஏராளமான வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில் ரூ.1,300 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, முன்னாள் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த தலைமைச் செயலாளருக்கு மாநில ஊழல் தடுப்பு பிரிவு கடந்த 2022-ம் ஆண்டு பரிந்துரைத்தது. முன்னதாக மாநிலத்தில் 2,400 வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய ஊழல் தடுப்புப்பிரிவும் கடந்த 2020-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி இருந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் மீது ஏற்கனவே மதுபான ஊழல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.