நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பான சென்னை போலீசார் நடத்தும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் ‛‛சீமான் இப்போது தான் நல்லா மாட்டி இருக்கிறார்” என்று அந்த நடிகை வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் மீது கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். திருமணம் செய்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டார். கருக்கலைப்பும் செய்தேன் என்று நடிகை கூறி வருகிறார். அதோடு சீமானை விமர்சனம் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதுதொடர்பாக நடிகை அளித்த புகாரில் 2011ல் சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை பிப்ரவரி 17 ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு பாலியல் புகார் தீவிரமானது.இதனை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உள்ளது. போலீசார் விசாரித்து 12 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் வழங்கி போலீஸ் நிலையம் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை விசாரித்துவிட்டு அனுப்பினர்.
இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரி சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் சீமானுக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையின்போத சீமான் தரப்பில், ”நடிகையுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறப்பட்டது.
இதுதொடர்பாக அந்த நடிகை இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-
என்னுடைய வழக்கில் சீமான் உச்சநீதிமன்றம் சென்று விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கினார். அந்த தடையை வாங்கியபோது நீதிபதிகள் இழப்பீடு கொடுங்க என்று கூறினார். சீமானின் வழக்கறிஞர் சார்பில் ‛ஆமாம் நாங்கள் அதுபற்றி தான் பேசி கொண்டு வருகிறோம். நிச்சயமாக செய்வோம்’ என்று கூறி ஆர்டரை வாங்கினார். அதன்பிறகு வெளியே சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அதுபோன்ற இழப்பீடு ஒன்றும் கொடுப்பது இல்லை என்று கூறுகிறார். இப்போது தமிழ்நாடு மீடியாவுக்கு ஒரு குழப்பம் உள்ளது. அதாவது அடுத்ததாக நான் என்ன செய்யப்போகிறேன்? என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களா? எனக்கு இழப்பீடு கொடுத்தார்களா? என்ற குழப்பம் உள்ளது. நான் எல்லோரிடமும் பேச முடியாது. இதனால் இந்த வீடியோ மூலம் தெளிவுப்படுத்துகிறேன்.
14 ஆண்டுகளாக இந்த வழக்கில் நான் எப்படி போராடி வருகிறேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இதில் எந்த அரசியலும் கிடையாது. சீமான் தான் தப்பிப்பதற்காக இதன் பின்னால் காங்கிரஸ் இருக்கு. பாஜக இருக்கு. திமுக இருக்கு என்று பொய் சொல்லவிட்டு தப்பித்து வருகிறார். இப்போது கூட சீமான் எந்த தவறும் செய்யாவிட்டால் தமிழ்நாடு காவல்துறையின் விசாரணைக்கு நேர்மையாக ஒத்துழைப்பு கொடுத்து இருந்தார் என்றால் நிறைய விஷயங்கள் வெளியே வந்திருக்கும். அடுத்ததாக நிறைய விஷயங்கள் வெளியே வந்துவிடும் என்பதற்காக தான் உடனே சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் விசாரணைக்கு தடை வாங்கி உள்ளார். வெளியே வந்து அவள் ஒரு பாலியல் தொழிலாளி என்று மறைமுகமாக மிரட்டுகிறார். அப்படி சொல்லிவிட்டால் நான் பயந்துப்போய் இந்த வழக்கில் போராட மாட்டேன். இன்னும் சில காலம் பேசிவிட்டு இந்த வழக்கு முடிந்துவிடும் என்று சீமான் ஒரு கணக்கு போடுகிறார்.
இப்போது சீமானிடம் நான் என்ன சொல்கிறேன் என்றால் பாலியல் தொழிலாளி என்று 14 ஆண்டுகளாக சொன்னதை நான் விடவே மாட்டேன். சுப்ரீம்கோர்ட்டுக்கு எடுத்துகொண்டு போய் ஏன் சீமானும், நாம் தமிழர் கட்சிக்காரர்களும் என்னை பாலியல் தொழிலாளி என்று கூறி சாகும் நிலைக்கு தள்ளுகிறார்கள் என்பதற்கு சீமான் பதில் சொல்லியே ஆகனும். இதனால் வழக்கில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவோ இல்லாவிட்டால் பெரிய தொகை செட்டில்மென்ட் பண்ணியாச்சி என்ற தகவலுக்கு யாரும் காது கொடுக்க வேண்டாம். இப்போது தான் சீமான் நல்லா மாட்டி இருக்கிறார். அடுத்ததாக என்னவெல்லாம் செய்யப்போகிறேன் என்பது என் தரப்பில் இருந்து வரும். அதுவரை அனைவரும் பொறுமையாக இருங்க. சீமானிடம் நான் என்ன சொல்கிறேன் என்றால் என் வாழ்க்கையை சீரழித்துவிட்டு கடைசியாக சுப்ரீம் கோர்ட் சென்று தடை கொண்டு வந்து என் பின்னால் திமுக உள்ளது என்று கூறி வித்தை காட்டியதும் அப்படியே விட்டுவிட்டு செல்ல நான் போராடவில்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சுப்ரீம் கோர்ட் மட்டுமில்லை எங்கே சென்றாலும் சீமான் பின்னால் சென்று போராட தயாராக இருக்கிறேன் என்பதை இந்த வீடியோவில் உறுதியாக கூறி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.