தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது. அதிமுக கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களை பேச அனுமதிப்பது இல்லை, அவர்கள் பேசும்போது சபாநாயகர் அப்பாவு அடிக்கடி குறுக்கீடு செய்கிறார், ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் கூறுகிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிப்பரப்புவுது இல்லை, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவை விதிகளின்படி, இந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள 35 எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையனும் எழுந்து நின்று தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தெடர்ந்து, அவையிலிருந்து அப்பாவு வெளியேறினார். இதையடுத்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவையை வழிநடத்தினார்.
இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு நூறு நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் 400 நாட்கள் சட்டப்பேரவை நடந்திருக்க வேண்டும். ஆனால் 116 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. மேலும், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின்போதும், எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளைக் கேட்பதில்லை. ஒரே நாளில் 4 துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்படுகிறது, என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நடத்தப்பட்டது. தீர்மானத்துக்கு திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவாதத்தில், பாஜக, பாமக உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. குரல் வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது எண்ணிக்கை முறையிலான வாக்கெடுப்பு ஆகும். சட்டப்பேரவையில் மொத்தம் 6 டிவிஷன்கள் உள்ளன. டிவிஷன் வாரியாக இந்த தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில், முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி சட்டப்பேரவை செயலர் முன்நின்று இந்த டிவிஷன் வாக்கெடுப்பை நடத்தினார். டிவிஷன் முறையிலும் சபாநாயகர் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
சபாநாயகர் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவளித்திருந்த நிலையில், 154 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால், சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.