தூர்வாரும் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்!

மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்புக்கு வசதியாக சிறப்பு தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறையின் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அரசால் அறிவிக்கப்பட்ட திட்டப் uணிகளின் முன்னேற்றம் குறித்து மண்டல வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி நீர்வளத்துறையின் முன்னோடியான திட்டங்கள் குறித்த முன்னேற்றம், நடைபெற்று வரும் முக்கிய திட்டப் பணிகள் குறித்த முன்னேற்றம், அணை புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்ற விவரங்கள் மற்றும் வெள்ளத் தணிப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அனைத்து அறிவிப்பு பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும் சிறப்பு தூர்வாரும் பணிகளை பாசன நீர் திறப்புக்கு வசதியாக விரைந்து முடிக்கவும், இந்த நிதியாண்டின் பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முழுமையாக முடிக்கும்படியும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, நீர்வளத் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) சா.மன்மதன், துறையின் சிறப்பு செயலாளர் சு.ஸ்ரீதரன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.