4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை?: எடப்பாடி பழனிசாமி!

மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக – அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், ஜெயலலிதா மடிக்கணினி உட்பட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். அவர்களால் கொண்டு வந்த திட்டங்களால் பயனடைந்தவர்களின் வயது 4. ஆனால் திமுகவினரால் கொண்டு வரப்படும் மகளிர் உரிமைத் திட்டத்தால் பயனடையும் பெண்களின் வயது வாக்களிக்கும் வயது. எனவே திமுக கொண்டு வரும் சமூக திட்டங்கள் சமூக மாற்றத்திற்காகவா? வாக்கு வங்கிக்காகவா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் கொண்டு வந்த பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அந்த திட்டம் வாக்கு வங்கிக்காக கொண்டு வந்ததா?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.

அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “காலை உணவுத் திட்டம் நாங்கள் கொண்டு வந்த திட்டம். அதைத் தான் நீங்கள் தொடர்கிறீர்கள்” என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அது எல்லாம் வாக்கு வங்கிக்காகவா இலங்கைத் தமிழர்களுக்கு திட்டங்கள் எதுவும் செய்யக் கூடாது என சொல்ல வருகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் எழுந்து பதில் அளித்தார். முதலமைச்சர் ஸ்டாலின், “மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. நீங்கள் தான் நிறுத்திவிட்டீர்கள். நாங்கள் சிந்தித்து மீண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்திருக்கிறோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து தான் இந்த அரசு இருக்கும் என ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன். எனவே இந்த விவாதம் தேவையற்றது” என்று பேசினார்.