நாக்பூரில் இரு பிரிவினர் இடையே மோதல்: வாகனங்கள் தீ வைப்பு!

அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என வலது சாரி அமைப்புகள் பேசி வந்தநிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. நாக்பூரில் வெடித்த இந்த வன்முறையால் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்குமாறு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. அண்மையில், அவுரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியதற்காக மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்தும் அங்கு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. அவுரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாகவும், அதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் மகாராஷ்டிரா பாஜக முதல்வரான பட்னாவிஸ் கூறினார்.

இதற்கிடையே, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தியும், அகற்றாவிட்டால் கரசேவை மூலம் அகற்றப்படும் என்று கூறி மகாராஷ்டிரா பாஜக அரசிடம் மனு அளிக்க பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட வலது சாரி அமைப்புகள் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து, அவுரங்கபாத் நகரில் உள்ள அவுரங்கசீப் கல்லறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கல்லறையை அகற்றக்கோரி வலதுசாரி அமைப்புகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இரு குழுக்கள் இடையே மோதல் எற்பட்டது. நாக்பூரில் உள்ள மஹால் பகுதியில் இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த தீ அணைப்பு வீரர்கள் சிலரும் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறான தகவலால் இந்த வன்முறை ஏற்பட்டதாகவும் தற்போது வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள துணை ஆணையர் ஆர்சித் சந்தாக், யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.