உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் விலாடிஸ்லா டோபில் பார்டோஸெவ்ஸ்கி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியபோது பிரதமர் மோடி போலந்தின் வார்சா நகருக்கு வந்திருந்தார். உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்காக மோடியை பாராட்டுகிறேன். இந்த விவகாரத்தில் நிரந்தர அமைதியை நாங்கள் விரும்புகிறோம். உக்ரைனில் நிலையான மற்றும் நீடித்த அமைதியை நாங்கள் விரும்புகிறோம். ரஷ்யா, உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு போலந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியபோது, உக்ரைனிலிருந்து அகதிகளாக வந்த ஏராளமானோருக்கு போலந்து அடைக்கலம் கொடுத்தது. அமைதி காக்கும் படை மற்றும் ராணுவ ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவை சேர்ந்த லெக்ஸ் பிரிட்மேன் (41), பிரபலமான உலக தலைவர்களை பேட்டி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி உடனான அவரது நேர்காணல் நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், ரஷ்யா, உக்ரைன் போருக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், போலந்து அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரிட்மேனுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறும்போது, “ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் எனக்கு நெருங்கிய உறவு உள்ளது. அதிபர் புதினுடன் உட்கார்ந்து, இது போருக்கான நேரம் அல்ல என்று என்னால் சொல்ல முடியும். இதுபோல, உங்களுக்கு எத்தனை பேர் ஆதரவாக நின்றாலும் போர்க்களத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என ஜெலன்ஸ்கியிடமும் நட்பு முறையில் சொல்ல முடியும். ரஷ்யாவும் உக்ரைனும் உட்கார்ந்து பேசினால்தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். நான் அமைதியின் பக்கம் நிற்பேன் என எப்போதும் கூறி வருகிறேன். நான் நடுநிலை வகிக்கவில்லை. அமைதி ஏற்பட வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு” என்றார்.