தொகுதி சீரமைப்பு விவாதிக்க மறுப்பு: திமுக லோக்சபா, ராஜ்யசபாவில் வெளிநடப்பு!

தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விவாதிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் இருந்து திமுக எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

தொகுதி மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் இது தொடர்பாக விவாதிக்க கோருகிறது திமுக. நாடாளுமன்றத்தில் இன்று இரு சபைகளும் கூடியதும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். லோக்சபாவில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். ஆனால் லோக்சபாவில் இந்த தீர்மான நோட்டீஸை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்க மறுத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து லோக்சபாவில் இருந்து திமுக எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல ராஜ்யசபாவிலும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராஜ்யசபாவில் இருந்தும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் நாட்டின் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இதனடிப்படையில் தமிழ்நாட்டின் தற்போதைய 39 லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை 31 ஆக குறையும் அபாயம் உள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாட்டை முறையாக கடைபிடித்ததால் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் தொகுதிகள் எண்ணிக்கை கணிசமாக குறைய இருக்கிறது. ஆனால் வட இந்திய மாநிலங்களோ, மக்கள் தொகை கட்டுப்பாட்டை பின்பற்றவில்லை. இதனால் வட இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அதிகம் என காரணம் காட்டி அங்கு தொகுதி எண்ணிக்கைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதற்கு எதிராக தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, பல்வேறு மாநிலங்களை ஒருங்கிணைத்து வருகிறது. சென்னையில் மாநிலங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்திலும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை திமுக எம்பிக்கள் இன்று எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.