நெல்லையில் நடந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை வழக்கில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டவுடனேயே போலீஸார் விசாரணை நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தமிழக சட்டசபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்கையில், உயிருக்கு அச்சுறுத்தல் என ஜாகீர் உசேன் வீடியோ வெளியிட்ட போதே போலீஸ் விசாரணை செய்தனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் இந்த ஆட்சி கடுமையாக நடவடிக்கை எடுக்கும். ஜாகிர் உசேனுக்கும் தெளபிக் என்பவருக்கும் இடையே இடப் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலப்பிரச்சினையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகீர் உசைன் கொலை செய்யப்பட்டார். ஜாகீர் உசேனை கொன்றவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (57). இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். ஜாகீர் உசேன் பிஜிலி, காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தற்போதைய முதல்வர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நெல்லை டவுனில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற அவர், தற்போது நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார். ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இவர் நேற்று அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றார்.
பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக் கொலை செய்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர்களிடம் இருந்து சட்ட போராட்டம் நடத்திய ஜாகீர், அந்த நிலத்தை ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு கொடுத்தார். இதனால் அவரை எதிர் தரப்பு கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.