பெண்களின் மார்பகங்களை ஆண்கள் தொடுவதை பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருத முடியாதென அலாகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பு தவறானது என்று சுட்டிக்காட்டியிருப்பதுடன் உயர்நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கான’ மத்திய அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி, மேற்கண்ட தீர்ப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய தீர்வு காண வலியுறுத்தியுள்ளார்.
பெண்களின் மார்பகங்களை பிடிப்பது, அவர்களின் ஆடைகளில் உள்ள ஜிப்பை அவிழ்ப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருத முடியாதென அலாகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இத்தகைய செயல்களை பாலியல் தொந்தரவு வகையிலான குற்றங்களாக மட்டுமே கருத முடியுமென நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கஸ்கஞ்ச் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர், கடந்த 2021-ஆம் ஆண்டு தமது தாயாருடன் சாலையில் நடந்து சென்றபோது இரு ஆண்களால் தாக்கப்பட்டார். அப்போது அந்த நபர்கள் சிறுமியிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் அந்த பெண்ணின் மார்பகங்களைப் பிடித்து கசக்கியும், அவர் அணிந்திருந்த பைஜாமா வகையிலான ஆடையில் ஜிப்பை அவிழ்த்தும் துன்புறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் குற்றவாளிகளின் இச்செயல்களை பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருத முடியாதென அலகாபாத் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோஹர் நாராயண் மிஷ்ரா கூறியுள்ளதாவது:-
குற்றஞ்சாட்டப்பட்ட பவன், ஆகாஷ் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பகங்களைப் பிடித்து துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகாஷ், அந்த பெண்ணின் கீழ் ஆடையைக் கழற்ற முயற்சித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. எனினும், சம்பவ இடத்தை நோக்கி மக்கள் நடமாட்டம் வருவதைக் கண்டு அவர்கள் இருவரும் தப்பியோடிவிட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வாக்குமூலம் அளித்ததாகவும் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள் இருவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகக் கருத முடியாது. அவர்கள் பலாத்காரம் செய்ய முயன்றதாக நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, அலாகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாதென்றும், கலாசாரத்தி பேணி கடைப்பிடிக்கும் சமூகத்தில் இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும், சமூகத்துக்கு தவறான கருத்தை இது சொல்லும் என்றும், இதனையடுத்து, மேற்கண்ட தீர்ப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய தீர்வு காணவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.