வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தனது புகழைக் கெடுக்கும் முயற்சிகளில் பாஜக மற்றும் இடதுசாரிகள் ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
பொறாமைக்கு மருந்து இல்லை. லண்டனுக்கு சென்று அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்ற உள்ள நிலையில் எனது புகழை கெடுக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருகின்றன. என்னை கேவலப்படுத்துவதாக நினைத்து அவர்கள் நாட்டின் புகழுக்குத்தான் களங்கம் விளைவிக்கின்றனர். ஏனெனில் இந்தியாவின் பிரதிநிதியாகத்தான் நான் அங்கு செல்கிறேன் என்பதை அவர்கள் உணரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி இன்று லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்ற திட்டமிட்டுள்ள அவர் தொழிலதிபர்களை சந்தித்து மேற்கு வங்க மாநிலத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 28-29-ல் மம்தா கொல்கத்தா திரும்ப உள்ளார்.