மடிக்கணினி தொடர்பான கேள்விக்கு பேரவையில் பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான மடிக்கணினி வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் தங்கம் தென்னரசு. கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!
யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய அவை நிகழ்வில், திமுக அரசில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினியின் தரம் பற்றி அதிமுக எம்எல்ஏ தங்கமணியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கின்படி ஒரு மடிக்கணினியின் விலை ரூ. 10,000 என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
இந்த நிதி ஓராண்டுக்குத்தான். அடுத்த ஆண்டும் ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, சராசரியாக ஒரு மடிக்கணினியின் மதிப்பு ரூ. 20,000 என்ற அளவிலே இருக்கும். அதனால் மடிக்கணினியின் தரம் குறித்த கவலை நிச்சயமாக உங்களுக்குத் தேவையில்லை. மாணவர்கள் விரும்பி அந்த மடிக்கணினியைப் பயன்படுத்தும் அளவிற்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினர்களே பொறாமைப்படக்கூடிய வகையில் அனைத்து உள்ளடக்கங்களுடன் மாணவ, மாணவிகளுக்கு தரமான மடிக்கணினிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.