கர்நாடக சட்டப்பேரவையை மீண்டும் உலுக்கிய ‘ஹனி டிராப்’!

ஹனி டிராப் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும், தன்னைப் போல் மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஹனி டிராப் மோசடி நடந்திருப்பதாகவும் அமைச்சர் கே.என்.ராஜண்ணா கூறியது தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

பெண்களை பயன்படுத்தி ஒருவரை பாலியல் சர்ச்சையில் சிக்க வைக்க நடக்கும் முயற்சி ‘ஹனி டிராப்’ எனப்படுகிறது. இத்தகைய ஹனி டிராப் வலையில் சிக்குவதால் அரசியல் பிரமுகர்கள் பலர், தங்களின் அரசியல் எதிர்காலத்தை தொலைத்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது நேற்று பேசிய அம்மாநில கூட்டுறவு அமைச்சர் கே.என். ராஜண்ணா, “எனக்கு எதிராக ஹனி டிராப் முயற்சி நடந்தது. நான் மட்டுமல்ல, கர்நாடகாவில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஹனி டிராப் முயற்சி நடந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதில் சிக்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று காலை சட்டமன்றம் கூடியதும், எதிர்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏக்கள் இந்த விவகாரத்தை அவையில் எழுப்பி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், ஹனி டிராப் நடந்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகக் கூறி தங்கள் கைகளில் இருந்த சிடிகளை சில உறுப்பினர்கள் காண்பித்தனர். சபாநாயகரை முற்றுகையிட்டு, பேப்பர்களை கிழித்து அவர் மீது வீசினர்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, “இது ஒரு கட்சியின் பிரச்சினை அல்ல. மக்களுக்காக உழைக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான மிகப்பெரிய சதி இது. சிலர் உள்நோக்கத்துடன் இத்தகைய ஹனி டிராப் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எனவே, இது தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் சித்தராமையா, “ஹனி டிராப்பில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கே.என். ராஜண்ணாவின் குற்றச்சாட்டுகளுக்கு உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஏற்கனவே பதிலளித்துள்ளார். தனக்கு எதிராக ஹனி டிராப் வலையை விரித்தவர் யார் என்பது குறித்து ராஜண்ணா சொல்லவில்லை. அவர் புகார் அளித்தால் அதன் அடிப்படையில் உயர் மட்ட விசாரணை நடத்தப்படும். அவர் யாரையாவது குறிப்பிட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும். வழக்கில் யாரையும் பாதுகாப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய கர்நாடக அமைச்சர் எம்.சி. சுதாகர், “இது ஒரு தீவிரமான பிரச்சினை. அது ஆளும் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி இது உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மரியாதைக்குரியவர்களை ஹனி டிராப் வலையில் சிக்க வைக்க, பெரும் தொகை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பட்டியலினத் தலைவரும் அமைச்சருமான கே.என். ராஜண்ணா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு, உள்துறை அமைச்சர் ஏற்கனவே பதிலளித்துள்ளார். ராஜண்ணா புகார் அளித்தால் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று பரமேஸ்வரா உறுதியளித்த பிறகும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மீண்டும் அதே பிரச்சினையை அவையில் எழுப்புவது ஏற்புடையது அல்ல.

இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கலில் சிக்கிய எவருக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சட்டத்தின்படி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ராஜண்ணா யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், நடவடிக்கை எடுத்திருக்கலாம். இந்த வழக்கில் யாரையும் பாதுகாப்பது என்ற கேள்விக்கே இடமில்லை.

இந்த விஷயத்தில் பாஜக உறுப்பினர்கள் சபையின் பொன்னான நேரத்தை வீணடிப்பது வேதனையளிக்கிறது. மாநிலத்தின் கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்கள், துக்கங்கள் மற்றும் கவலைகளைப் பற்றி விவாதித்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவது நமது கடமையாகும். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதை நிறுத்திவிட்டு எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.