வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது!

பஞ்சாப் விவசாயிகள் கைதை கண்டித்து வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் 120 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் கூடாரங்களை அகற்றிய பஞ்சாப் காவல்துறை, துணை ராணுவப் படையினர் உதவியோடு விவசாயிகள் மீது தடியடி நடத்தி, அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதனைக் கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி கீழச்சிந்தாமணி ஓடத்துறை காவிரிப் பாலத்தில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை நோக்கிச் சென்ற வைகை விரைவு ரயிலை, நடுப் பாலத்தில் மறித்த விவசாயிகள், மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீஸ் ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனர். விவசாயிகளின் திடீர் ரயில் மறியல் போராட்டத்தால் வைகை விரைவு ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.