அமைச்சர் சிவசங்கர், தி.மு.க. எம்.பி., ஆ.ராசா மீதான வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்தும் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதைய தி.மு.க., மாவட்ட செயலாளரும், தற்போது அமைச்சராக இருக்கும் சிவசங்கர் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் மீது 2 வழக்குகல் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகை அரியலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி அமைச்சர் சிவசங்கர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயக அடிப்படையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெற வில்லை என்று சிவசங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துள்ளது. அதனால், சிவசங்கர் மீதான வழக்குகளையும் ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டார். அதேபோல, தி.மு.க. எம்.பி., ஆ.ராசா மீதான வழக்குகளையும் ரத்து செய்தார். மேலும், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குகளை பதிவு செய்வதால், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து அது நீதிமன்றத்துக்கு சுமையை ஏற்படுத்துகிறது. இதற்கு பதில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு உடனடி அபராதத்தை போலீசார் விதிக்கலாமே என்று கருத்து தெரிவித்தார்.