பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்களின் தாக்குதலில் இருந்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆயுதம் தாங்கிய காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். அயல்பணி மூலம் வெளியாட்களை பணி நியமனம் செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தன.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்திய வங்கி சங்கத்தின் திகாரிகள் மற்றும் மத்திய நிதி துறைச் செயலாளர் பங்கேற்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இவற்றை நேரடியாக கண்காணிப்பதாக தலைமை தொழிலாளர் ஆணையர் தெரிவித்தார். மேலும், வரும் ஏப்ரல் 3-வது வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வரும் 24, 25-ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்து வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.